Thursday, June 10, 2010

நறியவும் உளவோ நீயறியும் பூவே!!!

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

-இறையனார்.

பூக்களில் உள்ள தேனை உண்டு வாழும் அழகிய சிறகுகளை உடைய வண்டே!! பழகுவதற்கு இனிமையும், மயிலை போன்ற அழகும், செறிவான அழகிய பற்களும் உடைய என் காதலியின் கூந்தலை விடவும் மணமுள்ள பூ ஏதேனும் நீ அறிவாயா!! என் மீது உள்ள அன்பால் எனக்கு இன்பமானதை கூறாமல், நீ கண்ட உண்மையை மொழிக!

இறையனார் என்பது இங்கு சிவபெருமானை குறிக்கும். சென்பக பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமன் பாடியது.

Tuesday, May 25, 2010

பெரியோர் சிறியோர்!

"யாதும் ஊரே !யாவரும் கேளிர் ! " இவை கணியன் பூங்குன்றனார்ப் பாடிய உலகப் புகழ்ப் பெற்ற வரிகள். தமிழ் கற்றோர் அனைவரும் அறிந்திருக்ககுடிய வரிகள். ஆனால் இவ்வரிகளக்கு பின்னால் வரும் ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகளை Airtel Super Singer Junior -2விலும், மானாட மயிலாடவிலும், திருமதி செல்வத்திலும், இராணி ஆறு இராஜ யாருவிலும் மூழ்கித் திளைக்கும் சாமாண்ய தமிழன் அறிந்திருக்க நியாயமில்லை. இந்த சாமாண்ய தமிழனில் மெத்த படித்தவர்கள், அரசியல் தலைவன், தொண்டன், மாவட்டச் செயளாளர், அரசு அதிகாரிகள், கூலித்தொழிலாளி,விவசாயி, மாலுமி, கணிப்பொறிக்காரன், வணிகன் என அனைவரும் அடங்குவர். கூப்பிடும் துரத்தில் இன சுத்திகரிப்பு நிகழ்ந்துகொண்டிருக்க தாய்தமிழக குடிமகன் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இலவச வண்ணத் தொலைகாட்சி பெட்டியை வசப்படுத்துவதிலும், கண்டு களிப்பதிலும் செலவிட்டான். தமிழன் தன் உரிமைகள் மறுக்கப்பட்டு, காலம் காலமாக வேறூன்றி நின்ற மண்ணைவிட்டு விரட்டப்பட்டு, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் புகலிடம் கோரி நிற்பான் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் ஆறிந்ததனால் "எல்லா நாடுகளையும் சொந்த நாடாக கருது, அனைவரையும் உறவினராக எண்ணு" என்று பாடியதாக எண்ண தோன்றுகிறது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நவ யுவன்களுக்கும் யுவதிகளுக்கும் "தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் ஏன் இலங்கைக்கு சென்றார்கள்?" என்று கேட்கும் அளவிற்கே பொது அறிவும் தமிழர் பிரச்சனைப் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்களே இவ்வாரிருக்க, பிறமாநிலத்தவரும், பிறமொழி பேசுபவர்களும், சர்வதேச சமுதாயமும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்ற நினைபதில் எள்ளவும் நியாயமில்லை.

இனி இப்பாடலை பார்ப்போம்,

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நம் நாடே.உலகில் உள்ள அனைவரும் நமக்கு உறவினரே. நமக்கு தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பத்தற்கான காரணமும் தீர்வும் நமுள்ளேயே இருக்கிறது. இறத்தல் என்பது இயற்கை, அதில் புதுமை ஏதும் இல்லை. வாழ்வது இனிமையானது என மகிழ்வதும் இல்லை. இடிமின்னலோடு வானத்திலிருந்து விழுகின்ற மழைதுளி ஒன்றுடனொன்று இனைந்து சிற்றோடையாகி, பின்பு ஓடைகள் இனைந்து பாறைகளில் மோதிப் பேரிறைசலுடன் ஓடுகின்ற ஆற்றில் உள்ள ஓடம் நீரோட்டத்தின் வழியாக செல்வது போல் நம் உயிர் ஊழ்வினை வழியாக செல்லும் என்பதை ஞானத்தில்க் கண்டோம். ஆதலால் பெரியோரை வியந்து புகழ்வதும் இல்லை,சிறியோரை இகழ்தலும் இல்லை.

Wednesday, May 19, 2010

முகைவாய் திறந்த நகைவாய் முல்லை !!

பண்டை தமிழர்களின் இல்வாழ்வை பற்றி நாம் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவுவது அகப்பொருள் நுால்கள். அகப்பொருள் நுால்கள் தமிழில் பல இருப்பினும் 'அகம்' என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் நுால் அகநானூறு மட்டுமேயாகும். கணவன் மனைவி இடையிலான உறவை பற்றியும், ஆற்று மணலிலும், ஏரிக் கரைகளிலும், மாந்தோப்புகளிலும் வளர்ந்த தலைவன் தலைவி இடையிலான காதலை பற்றியும், நாம் கற்பனை செய்ய முடியாத உவமைகளுடனும், இலக்கிய செரிவுடனும் சுவைபட வழங்குகிறது அகநானூறு.

இன்று நாம் மணிமிடை பவளத்தில் உள்ள முல்லை திணை பாடல் ஒன்றை காண்போம்.

"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!

- மதுரை மள்ளனார்.


'எண்ணையில் நனைத்து போன்ற பிசுபிசுப்பான தோலும், கரிய சிறகுகளும் உடைய வௌவால், பகலில் உறைவிடமாக கொண்ட உயர்ந்த கிளைகளையுடைய மரத்தை மாலை நேரங்களில் பிறிந்து சென்றுவிடும். அதுபோல மொட்டவிழ்ந்த ஒளிபொருந்திய முல்லை பூவும் வண்டினத்தை தன்னைவிட்டு பிரிந்து செல்லாது தடுத்துக் கொண்டிருக்கும் இந்த குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில் அவர் என்னை பிரிந்து சென்று என்னை துயர் கொள்ள செய்துவிட்டார். அவர் வந்தாலும் வராவிட்டாலும் இனிய முகத்துடன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்!.. தோழி!' என்று நிலவினும் குளிர்ச்சி பொருந்திய தன் கண்கள் சிவக்கும்படி புலம்பினாள் என்று பாணன் வந்து தூது சொன்னான். தேர்ப்பாகனே ! நாம் கருதி வந்த வினை முடியவில்லை. ஆயினும் நீ புல்லை நிரம்பத்தின்ற குதிரையை விரைவாக தேரினில் பூட்டி இல்லம் நோக்கி செலுத்துக.

Tuesday, May 18, 2010

யாயும் ஞாயும் யாரா கியரோ -செம்புலப் பெயனீரார்.


கிழ்கண்ட பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையை சேர்ந்தது.
ஆசிரியர் செம்புலப் பெயனீரார்.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் காதல் கொள்கின்றனர். அப்பொழுது தலைவன் தலைவியை நோக்கி பாடுகிறான்,

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".


Monday, May 17, 2010

தீதும் நன்றும்! - நாஞ்சில்நாடன்

ஆவணப்படுத்தப்பட்ட முதல் வதந்தி எதுவாக இருக்கும்?

மகாபாரதத்துக் கிருஷ்ணனும் தர்மாத்மாவான தர்மனும் சேர்ந்து செய்த காரியம் அது. மனதின்றி, கிருஷ்ணனின் வற்புறுத்தலில் தர்மன் பரப்பிய வதந்தி. துரோணாச் சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், சிரஞ்சீவி வரம் பெற்றவன். அதகளத்தில் அவன் இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி, 'அஸ்வத்தாம அதக, குஞ்சரக' என்று யானை எனும் பொருள்படும் குஞ்சரம் எனும் சொல்லைச் சத்தமின்றி உச்சரித்தானாம் தர்மன். வியாசனின் சொற்களுக்கு மாற்றுச் சொல் பெய்கிறான் வில்லிபுத்தூரான்.

'அத்தனே அடுவல்லாண்மை அசுவத்தாமன் என்னும்
மத்த வாரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கமானான்.'

அதாவது, அசுவத்தாமன் எனும் யானையை பீமன் எனும் சிங்கம் கொன்றான் என்பது.

தர்மன் பரப்பிய வதந்தி நெருப்பெனப் படர்ந்து, துரோணர் காதில் விழுந்து, வில்லை எறிந்துவிட்டு அன்று போர்க்களம் நீங்கினார் என்பது இதிகாசம்.

என்ன காரணத்துக்காக, யார் வதந்தி பரப்புகிறார்கள் என்பதை அரசாங்கத்தாலேயே கண்டுபிடிக்க முடிவதில்லை. இது போன்ற வதந்திகளுக்கு விளக்கம் கேட்டால், சின்ன வயதில் அப்பனைப் பெற்ற ஆத்தாள் சொல்வாள்- 'அது கேட்டயா மக்கா, சாலியக்குடியிலே நூலுக்குச் சாயம் பிடிக்கா. அதுக்காச் சுட்டி, இப்பிடிப் பெரளி கௌப்பிவிடுகா' என்று.

நெசவாளர் சமூகம், நூலுக்கு நன்கு சாயம் பற்ற வேண்டும் என்று வதந்தி பரப்பு வார்கள் என்பது அன்றைய நம்பிக்கை. இன்று நூலும், சாயமும், தறியும், நெசவும், இயந்திரங்களும் நெசவாளர் கைகளில் இல்லை.



3 மாதங்கள் முன்பு சொந்தக் கிராமத்தில் இருந்தேன். எல்லா வீடுகளிலும் முன்வாசல் கூரையில் வேப்பிலைக் கொத்துகள். வைசூரி, அம்மை, மணல்வாரி போட்டு இருந்தால் எச்சரிக்கைக்கு வேப்பிலைக் கொத்து செருகிவைப்பார்கள். இதென்ன, இத்தனை வீடுகளில் என விசாரித்தபோது சொன்னார்கள், 'நள்ளிரவில், சர்வ அலங்கார பூஷிதையாக, தலைவிரிகோலமாக, வாயில் வெற்றிலைக் கொலுவுடன் காற்சிலம்பு ஒலிக்க பெண் ஒருத்தி நடமாடுகிறாள்' என்று.

யார் கண்டு சொன்னார், இத்தனை பேருள்ள ஊரில் அவளை நேரிட்டு என்ன, ஏது எனக் கேட்பார் இல்லையா என ஏகப்பட்ட கேள்விகள். முன்பு எங்களூரிலும் கருஞ்சட்டைப் படையன்று இருந்தது. இன்று அந்த இனமும் அருகிவிட்டது.

சிறுவனாக இருந்தபோது, பௌர்ணமி இரவுகளில், 21 சிறு தெய்வ பீடாதிபதிகளில் ஒருவரான சங்கிலி பூதத்தான் வலம் வருகிறார் என்றொரு வதந்தி. அவரது இடுப்பில் இருந்து தங்கச் சங்கிலியில் கோக்கப்பட்ட பொற்கிடாரம். கிடாரம் நிறைய தங்கக் கட்டிகள். எவர் முதலில் விரலில் கீறி மூன்று சொட்டு ரத்தம் தருகிறாரோ அவருக்கு கிடாரப் பொன் என.

இரண்டு மாதங்கள் திடகாத்திரமான ஆண்கள் தெருப் படிப்புரையில், தலைமாட்டில் மடக்குக் கத்தியுடன் உறங்கினார்கள். தெருவில் சங்கிலிச் சத்தமும் கிடாரம் இழுபடும் சத்தமும் கேட்டால், கண்ணைத் திறக்காமல், மடக்குக் கத்தியை நிமிர்த்தி, இடது கை சுண்டுவிரலில் கீறி, மூன்று சொட்டுகள்... ஓரிருவர் விரல் கிழித்து கட்டுப்போட்டுக் கொண்டதும் உண்டு. ஆனால், இன்றும் கிடாரத்தைக் காணோம்.

உலக சோதிட மேதைகள் கணித்து வதந்தி பரப்பினர். அக்டோபர் மாதம் 21-ம் நாள், சப்தமி திதியும் புனர்பூச நட்சத்திரமும் கூடிய வேளையில் உலகம் அழியும் என சில தினசரிகள், நாள்தோறும், உலகம் அழிய இன்னும் பதினாறு நாட்களே இருக்கின்றன என்று Rocket Launching Count Down போலச் செய்திகள் வெளியிட்டன.

சரி, எதுவானாலும் உலகம் அழியத்தானே போகிறது என எவரும் தின்று முடித்து, உடுத்து மினிக்கித் திரியவில்லை. கழுத்தணிகளை விற்கவும் இல்லை, வைப்பு நிதிகளை வங்கிகளில் இருந்து எடுக்கவும் இல்லை. சாவதற்கு முன் ஒரு முறையேனும் டிஸ்கொதெ, காபரே பார்த்துவிட எண்ணியவர் மேற்கொண்டு துணியவும் இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ்கள் வாசித்து வருகிறேன். இதற்குள் முப்பது முறைகளுக்கு மேல் உலகம் அழிந்திருக்க வேண்டும். நமது முன்னோர் செய்த தவப் பயன்! இன்னும் அழியாமல்தான் இருக்கிறது உலகம்.

ஒரு சமயம் வேறொரு வதந்தி வந்தது. தலைஇல்லா முண்டம் வீதி உலா வருகிறது என. உண்மையில் அறிவில்லா முண்டங்கள்தான் அல்லும் பகலும் நாட்டில் அலைகின்றன.

ஈராண்டுகள் முன்பு சென்னையில், பெருமழை பெய்த இரவொன்றில், மறுநாள் காலையில் வெள்ள நிவாரணநிதி என ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது எனும் வதந்தியில் பெண்களும் சிறுவர் சிறுமியரும் கூடி, நெரிசலில் இடியுண்டு, மிதியுண்டு, சதைப்புண்டு மாண்டுபோனவர் எண்ணிக்கை இன்று எவருக்கேனும் நினைவிருக்கிறதா?



கார்த்திகை மாதம் மூன்று நாள் விளக்கு வைத்தால் கூடப் பிறந்தவனுக்கு நல்லது என்றொரு வதந்தி. ஆனால், நமது மரபே அதுதான்... கார்த்திகை மாதம் மூவந்திக் கருக்கலில் எல்லா நாட்களிலும் விளக்கேற்றுவது!

பண்டு ஒரு கார்த்திகை மாதத்தில், மீன் சாய்கரைப்பட்டு, சாளை மீன்கள் மலையாகக் குவிந்து, மலிவாக வாங்கித் தின்று வயிற்றுப்போக்கு ஆனபோது, மீன் தின்றால் காலரா வரும் என்றோர் வதந்தி பரவி, நாஞ்சில் நாட்டுப் பெண்டுகள் அஞ்சியஞ்சி மீன் வாங்கினார்கள். சமீபத்தில் வேறொரு வதந்தி, நெத்திலிக் கருவாடு தின்றால் சிக்குன்குனியா உடனே குணமாகிறது என.

மதங்கள் தொடர்ந்து வதந்திகளைப் பரப்புகின்றன. திருப்பதி வெங்கடாசலபதி பெயரில்தான் எத்தனை வதந்திகள்? கன்னியாகுமரி கடற்புறத்தில், பரவர் கட்டுமரங்கள் கரை ஏறியபோது, முன்தலையில் சிலுவைக் குறியிட்ட மீன் கிடைத்தது. ஆகவே 'ஏசு வருவதற்கான அடையாளம் அது' எனவோர் வதந்தி.

சமீபத்தில் ஒரு பெருவதந்தி. 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு தினம்' அன்று சவரன் பொன் நாலாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது என. மக்கள் வட்டிக்குக் கடன் வாங்கி, நகைக் கடை வாசல்களில் காத்துக் கிடந்தனர். தமிழ்ப் பழமொழி ஒன்றுண்டு, 'கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு மதி இல்லையா?'

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே 'அட்சய திரிதியை' என்ற ஒன்றைக் கேள்விப்படுகிறோம். அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு பூராவும் தங்கம் வாங்கித் தீராதாம். பல கடைகளில், முன்பதிவு செய்துகொள்கிறார்கள். ஏறுவெயிலில் மக்கள் கடைவாசலில் காத்துக் கிடக்கிறார்கள். மட்டமான தங்கம் கோடிகள் கொடுத்து வாங்கப்படுகின்றன என்கிறார்கள்.

1967-ல் தேர்தலில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை, பெரும் வதந்தியைப் பரப்பினார், யாம் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என. சென்னையிலும் கோவையிலும் சிலருக்குக் கொடுத்து, புகைப்படங்கள் எடுத்து, ஆவணப்படுத்தி, சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். ரூபாய்க்கு மூன்றுபடி என முழங்கியபோது ஒரு கப் தேநீர் ஒன்றரை அணா; எனில் பத்து காசு. சற்று கணக்குப் போட்டுப் பார்ப்போமா? ஒரு படி அரிசி எனில் உத்தேசமாக ஒரு கிலோ என்றால், அன்று பரப்பிய வதந்திப்படி ஒரு கிலோ 33 காசு. 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. பத்து காசாக இருந்த தேநீர் 4 ரூபாய், அதாவது 40 மடங்கு. அதே விகிதம் எனில், அன்றைய ரூபாய்க்கு 3 படி என்பது, இன்றைக்கு கிலோ 13 ரூபாய். ஆனால், இன்றைய வதந்தி 'ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்'. என்ன பொருளாதார விஞ்ஞானம் இது?

சில ஆண்டுகள் முன்பு, நமது தாய்க்குலம் பச்சைப் புடவை சுற்றித் திரிந்தது. 'சகோதரிக்கு சகோதரன் பச்சை நிறப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்பது வதந்தி. எல்லா சாயப் பட்டறைகளும் துணிகளுக்குப் பச்சை நிறத்தில் சாயமேற்றி, கழிவை நொய்யலில், பவானியில், காவிரியில், அமராவதியில் பச்சை நிறத்தில் விட்டன. தமிழ் சினிமாவோ பச்சை என்றால் கிட்டத்தட்ட அம்மணம் எனப் புரிந்துகொண்டு, முன்னும்பின்னும் ஆட்டச் சொல்லி அகம் மகிழ்ந்தன.

சமீபத்தில் இந்திய மக்களைத் திடுக்கிட்டு விழிக்கச் செய்து பல்கூட விளக்காமல் வங்கி ஒன்றின் வாசலுக்கு ஓடச் செய்த வதந்தி, 'அந்த வங்கி திவாலாகிவிட்டது' என்பது.

இன்று எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்திகள் பரப்புகிற வதந்திகள் ஏராளம். குண்டு வைக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தி வந்த கையோடு, வதந்திகளை நம்பாதீர் என அரசாங்கமே வதந்திகளைக் குறுஞ்செய்தியாக அனுப்புகிறது. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் எனப் பல வதந்திகளைக் கேட்டவர்கள் நாம்.

சமீபத்தில் எனக்கு வந்த குறுஞ்செய்தி ஒரு வதந்தி கூறியது. லஞ்சம் வாங்குபவர் பற்றிய தகவல் சொல்ல கீழ்க்கண்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள். இம் என்பதற்குள் ஆயிரம் பெயர்கள் நம்மால் சொல்ல முடியும். யார் மீது எவர் நடவடிக்கை எடுப்பது? பிறகு, எந்த நோக்கத்துடன் இந்த வதந்திகளைப் பரப்புகிறார்கள்?

இன்னார் மந்திரி ஆகப் போகிறார் என்று வதந்தி. இன்ன தலைவர் மகள் சமையற்காரனோடு ஓடினாள் என வதந்தி. முன்னனி நடிகை கர்ப்பமா என வதந்தி. இன்ன நடிகைக்கு இன்ன தொழிலதிபர் 5 நட்சத்திர ஓட்டல் வாங்கிப் பரிசளித்தார் என்று ஒரு வதந்தி. குரங்கு போல, காக்கை போலக் குழந்தை பிறந்தது என்று வதந்தி.

மருத்துவமனைக்குப் போன முதலமைச்சர் மாண்டுவிட்டார் என்ற வதந்தியில் கட்சிக் கொடிகள் ஒருநாள் அரைக் கம்பத்தில் பறந்தன. கடற்கரையில் புதைக்கப்பட்ட புரட்சி முதலமைச்சர் கையில் கட்டப்பட்டு இருந்த கடிகாரத்தில் அவர் கொள்ளையடித்துச் சேர்த்த பணம் வைக்கப்பட்டு இருந்த சுவிஸ் வங்கிக் கணக்கு எண் இருக்கிறது என்றது முதல் நாள் வதந்தி. இரண்டாம் நாள் வதந்தி, பல்கலைக்கழகத்தின் ஆவணக்காப்பக அறையில் இருந்து, சுரங்கம் தோண்டி கல்லறையை நெருங்கிவிட்டான் என்றது.

தற்சமயம் பரவிவரும் இன்னோர் வதந்தி, இன்னும் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு தீரும் என்பது.

சிலவற்றுக்கு நோக்கம் இருக்கலாம். சில வதந்திகள் வேடிக்கையாக இருக்கலாம். சில உயிருக்கு எமனாகவும் முடியலாம்.

தமிழ் இலக்கியத்தில் கிடக்கும் மாபெரும் வதந்தி ஒன்றும் உண்டு. 'சேரன் செங்குட்டுவன் வடபுலம் படை நடத்தி, கனக விசயர் எனும் மன்னரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர் தலையில் ஏற்றி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடத்திக் கூட்டிவந்து, அந்தக் கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்தான்' என்பது.

அந்த சேரன் செங்குட்டுவனையும் கனக விசயரையும் வரலாற்றுக்குள்ளும் இமயத்துக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகியின் சிலையை பூகோளத்தினுள்ளும் ஆய்வாளர் பலர் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வதந்தி வேறு, வரலாறு வேறு!

வதந்திகள் பலவும் தமிழனின் வரலாறாக இன்று சமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பது வதந்தி அல்ல, உண்மை!


- நாஞ்சில்நாடன்

இக்கட்டுரை ஆனந்த விகடன் இதழில் தீதும் நன்றும்! என்ற தலைப்பில் நாஞ்சில்நாடன் எழுதியது.